தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்வதாக கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்த நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி நகராட்சி மீன் மார்க்கெட் பகுதி, சந்தைப்பேட்டை, பென்னாகரம் மேம்பாலம் பகுதியில் இருக்கும் மீன் இறைச்சி விற்பனை கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது ஒரு சில கடைகளில் இருந்த 15 கிலோ தரமற்ற அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அளித்தனர். இதனையடுத்து 3 கடை உரிமையாளர்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பொதுமக்களுக்கு தரமற்ற மீன்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.