கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி, கருப்பண கவுண்டர் வீதி, தர்மராஜா கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழரசன் தலைமையில் குழுவினர் மொத்தம் 45 கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது 16 கடை குடோன்களில் ரசாயன பொட்டலங்களை வைத்து பழங்களை பழுக்க வைத்தது தெரியவந்தது.

இதனால் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 22 1/2 டன் மாம்பழங்கள், 2 1/2 டன் சாத்துக்குடி என மொத்தம் 25 டன் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதுபோல ரசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.