சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய 8 புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி 8 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு நீச்சல் குளத்தில் அனுமதி இல்லை.

இதனையடுத்து 8 வயதில் இருந்து 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். நீச்சல் குள விதிகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் நீச்சல் குள வளாகத்தில் ஒட்ட வேண்டும். பயிற்சி பெறுபவர்கள் வலிப்பு நோய், இருதய மற்றும் சுவாச கோளாறு, தோல் நோய்கள், பாலுறவு நோய்கள், பிற தொற்று நோய்கள் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நீச்சல் குளத்தில் ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 20 குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முக்கியமாக அவர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் உயிர் காக்கும் இரண்டு வீரர்கள் முன்னிலையில் பயிற்சி பெற வேண்டும். பராமரிப்பு பணி அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக நீச்சல் குளம் மூடப்பட்டால் மாநகராட்சியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பயிற்சி பெறுவதற்கு பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வமான இசைவினை பெற்றுக்கொள்ள வேண்டும். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மூன்று நீச்சல் குளங்களை சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்த புதிய விதிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும், அறிவுரைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.