ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி எப்படி செயல்பட்டது?

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல்  தொடங்கவுள்ளது. சமீப காலமாக ஒருநாள் போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கணிக்கப்படுகிறது.

அதேசமயம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் வரவிருக்கும் உலககோப்பை தொடரில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும், இது வலுவான அணிகளில் ஒன்றாகும். அதற்கு சான்று தான் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3- 2 என்ற கணக்கில் வென்றது தென்னாபிரிக்கா. எனவே இது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். அதேபோல இந்தியாவும் கடைசியாக ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இனி 10 அணிகளுமே தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடி பின் உலக கோப்பை தொடரில் மோதும். இதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி எப்படி செயல்பட்டது? என்பது பற்றி பாப்போம்.

ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 2 முறை தோற்கடித்தது :

1975 முதல் இதுவரை 12 ஒருநாள் உலக கோப்பை நடைபெற்றுள்ளது. இந்த முறை 13வது உலக கோப்பை நடக்கவுள்ளது. இதுவரை நடந்த உலக கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில்  தென்னாப்பிரிக்காவை இந்தியா 2 முறை (2015, 2019) தோற்கடித்துள்ளது, இந்தியா 3 முறை (1992, 1999, 2011) தோல்வியடைந்துள்ளது. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பைகளில் தோல்விகளை சந்திக்கும் முன் 1992, 1999 மற்றும் 2011 இல் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது. உலகக் கோப்பையின் நாக்-அவுட் கட்டத்தில் இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியதில்லை. கடைசியாக 2019 உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் மோதிய போது இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச மற்றும் குறைந்த ஸ்கோர்கள் :

2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக (307/7) எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர். 1992 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் குறைந்த ஸ்கோர் (180/6) இதுவாகும்.

இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் அதிகபட்ச ஸ்கோர் 2011ல் (300/7) அடித்தது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 297 ரன்களை சேஸ் செய்தது. (உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக மிகவும் வெற்றிகரமான ரன் சேஸ்). இந்தியாவுக்கு எதிராக 2015ல் தென்னாப்பிரிக்காவின் குறைந்த ஸ்கோர் 177 ரன்கள் ஆகும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் பேட்டிங் சாதனைகள் :

சச்சின் டெண்டுல்கர் (3 போட்டிகளில் 153 ரன்கள்) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் ஆவார். ஷிகர் தவான் (137 ரன்கள், 2015ஆம் ஆண்டு) உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த சாதனையைப் படைத்துள்ளார்.

சச்சின் (2011ல் 111), ரோஹித் ஷர்மா (2019ல் 122*) ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உலகக் கோப்பையில் சதம் அடித்த மற்ற இந்தியர்கள் ஆவர்.

தென்னாப்பிரிக்கா அணிக்காக ஜாக் காலிஸ் (2 போட்டிகளில் 165 ரன்கள்) உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் பந்துவீச்சு சாதனைகள் :

உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா சார்பில் அதிக விக்கெட்கள் (4) வீழ்த்திய பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆவார். 2019ஆம் ஆண்டு உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் (4/51).

உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை (6) வீழ்த்தியவர் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக வேறு எந்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளரும் தனது பெயரில் 4 விக்கெட்டுகள் கூட எடுத்ததில்லை.

தென்னாப்பிரிக்கா – இந்தியா ஒருநாள் போட்டியில் யார் ஆதிக்கம் : 

இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்தியா 37 ஆட்டங்களிலும், தென்னாப்பிரிக்கா 50 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கிடையில், 3 போட்டிகளும் முடிவில்லை. ஆனால் தற்போது இந்திய அணி வலுவாக உள்ளது. இரு அணிகளும் கடைசியாக 2022 அக்டோபர் மாதத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதியது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் கடைசி 2 ஒருநாள் உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தியுள்ளதால் இந்தியாவின் கை ஓங்குகிறது.