அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, தமிழக அரசின் முதன்மை திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீடு தேர்வு கடந்த 2021ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் 3 மற்றும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில், கற்றல் திறன்வழி மதிப்பீடு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி முதல் 2 கட்ட தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதத்தில் முடிந்தது. தற்போது 3ம் கட்ட தேர்வு, கால அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

அந்தத் தேர்வு வருகிற நவம்பர் 25 முதல் 29 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில் டிசம்பர் 4 ம் தேதி மத்திய அரசின் தேசிய சாதனை ஆய்வு தேர்வு நடைபெற உள்ளதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாட வேளையிலே நடத்தி முடிக்க வேண்டும். மாணவர்களுக்கு தனித்தனியாக வினாத்தாள்களை வழங்கி, அதிலேயே விடைகளை எழுத வேண்டும். தேர்வுகள் முடிந்த பின்னர் விடைத்தாளை திருத்தி விட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.