கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சாரை சாரையாக வந்து சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “எங்கே பார்த்தாலும் வட இந்தியர்கள் இருக்கின்றார்கள். இது எங்க போய் நிற்க போகுது என்று தெரியவில்லை. எனக்கு ஒரே ஒரு நடுக்கம் தான். ஈழத்தில் நடந்து இங்கு நடந்து விடுமோ எனக் கூறியுள்ளார்.

தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து-வும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனிடையே வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகளவு இருப்பதாகவும் இதனால் தமிழ்நாடு தொழிலாளர்களின் வாழ்வாதாரமே முடங்கி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.