சேலம் அருகே 150 ஆண்டுகளாக ஓர் கிராமமே மாடி வீடு கட்டி கொள்ளாததற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான்  பொருளாதார அளவில் மேம்பட்டவர்கள் என்ற கட்டமைப்பு இந்த சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆகவே சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவாக பலருக்கும் அமைந்திருக்கிறது. அப்படியான கனவு வீட்டை தான் விருப்பப்படி செதுக்கி கட்ட வேண்டுமென நினைப்போர் மத்தியில்  பழங்கால நம்பிக்கை ஒன்றிற்கு கட்டுப்பட்டு, மாடி வீடு கட்டாமல் ஓர் கிராம  மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருத்தராஜ பாளையம் என்னும் ஊரில் யாரும் மாடி வீடு கட்டிக் கொள்வதில்லை. மாடி வீடு கட்டாமல் இருப்பதற்காக அவர்கள் காரணமாக கூறுவதாவது, எங்கள் ஊரில் உள்ள கோவிலில் இருக்கும் சாமியே தரையில்தான் இருக்கிறது. சாமி தரையில் இருக்கும் போது மாடி வீடு கட்டி மாடியிலிருந்து தெய்வத்தை பார்ப்பது சரியான செயலாக இருக்காது. இதுதான் எங்களுடைய ஊரின் வழக்கம். இதை மீறி யாராவது மாடி வீடு கட்டினால் பெரும் அசம்பாவிதம் நிகழ நேரிடும் என தெரிவிக்கின்றனர். இந்த பழக்கவழக்கத்தை அவ்வூர் மக்கள் 150 வருடங்களாக பின்பற்றி வருகிறார்கள் என்பது ஆச்சரியத்திற்குரியது.