இந்திய ரயில்வே துறை காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இடம் ஒதுக்கும் நடைமுறை குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ரயிலில் பயணம் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் சாதாரண பெட்டியில் உள்ள 2ஆம் வகுப்பில் முன் பதிவு செய்திருந்தால், அவருக்கு 3ஆம் வகுப்பு குளிர்சாதன வகுப்புகளில் காலி இடங்கள் இருந்தால் எந்தவித கட்டணமும் இன்றி இருக்கை வழங்கப்படும்.

ஆனால் தற்போது மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது சாதாரண பெட்டியில் 2ஆம் வகுப்பில் முன் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக்கு, 3ஆம் வகுப்பு குளிர்சாதனப்பெட்டி மட்டுமல்லாமல், 2ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் காலியிடம் இருந்தாலும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அதேபோன்று 3ஆம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக்கு 2ஆம் வகுப்பு அல்லது முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் காலி இடங்கள்  இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தற்போது மத்திய ரயில்வே துறை இந்த திட்டத்தினை பகல் நேரங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.