
திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் வாலிபர் தேர்ச்சி பெறாததால் இந்த வருடம் பயிற்சி பெற்றுக்கொண்டு நீட் நுழைவு தேர்வை எழுதினார்.
இந்நிலையில் தேர்வு முடிந்த பின் வீட்டிற்கு திரும்பிய அவர் வினாத்தாள்களை வைத்துக்கொண்டு தனக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தேர்ச்சி பெற முடியாது என எண்ணினார். இதைத்தொடர்ந்து தன் மீது பெற்றோர் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற முடியாததை எண்ணி மனமுடைந்த வாலிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பின் சங்கீர்த்தனன் பெற்றோர் காலை தன் மகன் அறையில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்தனர். அந்த புகாரின் படி விசாரணை நடத்திய காவல் துறையினர் அவரது அறையில் இருந்த கடிதத்தை கண்டறிந்தனர்.
அதில் “நீட் தேர்வை தான் சரியாக எழுதவில்லை என்பதால் உங்களுக்கு கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியவில்லை. எனவே என்னை மன்னித்து விடுங்கள். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கான சீட்டோடு தான் நான் வீட்டிற்கு வருவேன் ” என்று இருந்தது. மேலும் காவல் துறையினர் காணாமல் போன வாலிபரை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .