பீகார் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்து இருக்கிறது. இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக சாந்திகுமாரி, ஜூஹி குமாரி எனும் இரண்டு பெண் காவலர்கள் இருந்து உள்ளனர். அப்போது வங்கி முன்பு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கி உள்ளனர். வெளியே 2 பேர் நிற்க, 2 பேர் மட்டும் முகமூடி அணிந்துகொண்டு வங்கிக்குள் சென்றனர்.

இதன் காரணமாக சந்தேகமடைந்த 2 பெண் காவலர்களும் முக மூடியை கழற்றி வங்கி பாஸ்புக்கை காட்டுமாறு கூறி உள்ளனர். அப்போது அந்த இரண்டு பேரும் சட்டென கை துப்பாக்கிகளை காவலர்கள் மீது நீட்டி உள்ளனர். அதற்கெல்லாம் அஞ்சாத காவலர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் பறந்து தப்பி ஓட முயன்ற அவர்களைத் தாக்கினர்.

தங்களது துப்பாக்கிகளைக் கொண்டு அடித்து அவர்களை ஓடஓட விரட்டினர். இருப்பினும் வங்கி கொள்ளையர்கள் தங்களது இருசக்கர வாகனத்தைக் கூட எடுக்காமல் அங்கிருந்து தப்பிஓடினர். பெண் காவலர்களின் தைரியமான இச்செயல் வங்கியின் சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட எஸ்பி மணீஷ் வங்கியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெண் காவலர்கள் சாந்திகுமாரி, ஜூஹி குமாரியின் வீரதீர செயலுக்காக பரிசு வழங்கப்படும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார். இதற்கிடையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.