
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோம்பில்வியில் வசித்து வரும் 31 வயது நபருக்கு திருமண நிச்சயதார்த்தத்தின் போது எந்தவித போதைப்பழக்கமும், நோயும் இல்லை என்று பெண் வீட்டாரிடம் கூறி திருமணம் நடத்தியுள்ளனர். அதன் பின் அந்த நபர் அடிக்கடி மருந்துகளை உட்கொள்வது குறித்து கேட்டபோது தனக்கு காசநோய் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தொடர்ந்து உடல்நிலை கோளாறு, எப்போதும் விடாத இருமல் போன்றவற்றால் சந்தேகம் அடைந்த மனைவியிடம் அவரது கணவரும், மாமியாரும் தொடர்ந்து எந்த பதிலும் கூறாமல் இருந்துள்ளனர். இதனால் தனது பெற்றோரிடம் அந்தப் பெண் தனது கணவரின் மருத்துவ நிலை குறித்தும், தன்னிடம் எந்த ஒரு பரிசோதனை அறிக்கைகளையும் காட்ட மறுத்ததையும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்தப் பெண்ணை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது அப்பெண்ணிற்கு எச்.ஐ.வி தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் கணவரையும், மாமியாரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அந்த நபருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு இருப்பதும், அதனை மறைத்து திருமணம் செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.