
உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஒரு பகுதியில் பஞ்சாபி சிங்(39) என்ற இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு சென்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, தனது தந்தை புத்தா சிங் என்பவரை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் 9 வயது சிறுவனாக இருந்தபோது தன்னுடைய தாயார் ஊர்மளா தேவி(70),மூத்த சகோதரர்கள் பிரதீப், முகேஷ், மற்றும் மற்றொரு நபரான ராஜ்வீர்சிங் ஆகியோர் கொலை செய்து வீட்டின் முன் பகுதியிலேயே புதைத்து விட்டனர். ராஜ்வீர் சிங் தங்களுடைய வீட்டிற்கு வருவார் இதனால் தன்னுடைய தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
ஒரு நாள் இரவு தன்னை பக்கத்து வீட்டில் உறங்க வைத்துவிட்டு தனது தாயும், சகோதரர்களும், ராஜ்வீர் சிங் ஆகியோர் தந்தையை கொலை செய்து விட்டனர். அடுத்த நாள் காலையில் தந்தை இறந்து கிடந்ததாகவும் அவரை சகோதரர்கள் வீட்டின் முன் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பஞ்சாபி சிங்கின் வீட்டிற்கு சென்று தோண்டிப் பார்த்ததில் எட்டு அடியில் எலும்புக்கூடுகள் தென்பட்டன.இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த எலும்பு துண்டுகளை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிவர முக்கிய காரணம் சொத்து தகராறு ஆகும். பஞ்சாப் சிங்குக்கும்,மூத்த சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் சிங்கின் சகோதரர்கள் தந்தையை கொலை செய்த மாதிரியே உன்னையும் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
எனவே தன்னுடைய குழந்தை பருவத்தில் நடைபெற்ற சம்பவத்தை சிங் உடனடியாக காவல்துறைக்கு சென்று கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த கொலையில் வேறு யாரேனும் உள்ளனரா?என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.