கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடத்தில் பட்டதாரியான பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர்கள் நீங்கள் முன்பணம் செலுத்தினால் விரைவில் உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர். அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக பிரியதர்ஷினி 14 லட்ச ரூபாயை அனுப்பியுள்ளார்.

ஆனால் கூறியபடி அவர்கள் பன்னாட்டு நிறுவனம் அமைக்க அனுமதி வாங்கி தரவில்லை. இதுகுறித்து பிரியதர்ஷினி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் பிரசாத்(54), அவரது மகன் சுராஜ்குமார்(24) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரும் ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி ஜார்கண்ட் சிறையில் இருந்தனர். இதனால் சைபர் கிரைம் போலீசார் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று தந்தை, மகன் இருவரையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.