கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் பகுதியில் இன்ஜினியரான ஹரிபிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி ஹரி பிரசாத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனது பெயர் தேவிகா எனவும், அவர் ஏ.ஜே என்ற பெயரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து யூடியூபர்களுடன் சேர்ந்து தான் வேலை செய்வதாகவும், சந்தாதாரர்களை அதிகரிக்க மார்க்கெட்டிங் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டெலிகிராமில் அனுப்பும் விளம்பர வீடியோக்களை பார்த்து ஸ்க்ரீன்ஷாட் அனுப்பினால் குறிப்பிட்ட தொகை கமிஷன் தருவதாக கூறினார்.

அவர் கூறியபடி ஹரிபிரசாத் செய்தவுடன் அவரது வங்கி கணக்கிற்கு 150 ரூபாய் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினால் அதிக கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி ஹரி பிரசாத் பல்வேறு தவணைகளாக 6 லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய் வரை அனுப்பியுள்ளார்.

ஆனால் கமிஷன் தொகை எதுவும் கிடைக்கவில்லை. பணமும் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹரிபிரசாத் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.