திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிருந்தா கார்த்திகா பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்கருக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் எனக்கு உயர் அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை வாங்கிவிடலாம் என முத்துப்பாண்டி கூறியுள்ளார்.

இதை நம்பி பாஸ்கர் 3 தவணைகளாக 15 லட்சம் ரூபாய் பணத்தை முத்துப்பாண்டியிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி முத்துப்பாண்டி வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக பாஸ்கர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.