கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கோவை மாநகரில் பதிவு செய்யாமல் நகை சீட்டு, மாத சீட்டு நடத்துவதாக புகார்கள் வருகிறது. அது போன்ற சீட்டுகளில் பொதுமக்கள் சேர வேண்டாம். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி பதிவு செய்த நிறுவனத்தினர் மட்டுமே சீட்டுகளை நடத்த அனுமதி உண்டு. அப்படி பதிவு சான்று இல்லாமல் சீட்டு நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதனையடுத்து கோடைகால விடுமுறையில் வீடுகளை பூட்டிவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும்போது மக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வீட்டில் விலைமதிப்புள்ள நகை, பணத்தை வைத்து செல்ல வேண்டாம். மேலும் கண்காணிப்பு கேமரா சரியாக செயல்படுகிறதா? என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.