கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் நஷீர் – ஷரீபா தம்பதி. இந்த தம்பதிக்கு பாத்திமா என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரீபா உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார்.

அப்போது மகள் பாத்திமாவுக்கு இரண்டு வளையல்களும் தங்கச் செயலும் போட்டு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்ததும் சிறுமி பாத்திமா செயின் மற்றும் வளையலை கழற்றி பேப்பர் ஒன்றில் மடக்கி வைத்துள்ளார்.

அதோடு தாயிடம் இந்த இடத்தில் நகையை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஷரீபா நகையை எடுக்க மறந்துவிட்டார். இந்நிலையில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ஷரீபா மகள் கூறிய இடத்தில் நகையை தேடி உள்ளார்.

ஆனால் அங்கு நகையில்லாமல் இருந்துள்ளது. இதனால் உறவினர்கள் உதவியுடன் வீடு முழுவதிலும் நகையை தேடி பார்த்துள்ளார். அப்போது தென்னை மரம் ஒன்றின் அடியில் தங்கச் செயின் கிடந்துள்ளது. அதனை எடுத்து மகிழ்ச்சி அடைந்த ஷரீபா வளையலை தேடி உள்ளார்.

அப்போது உறவினர் ஒருவர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை வாயில் எடுத்துச் செல்வதை கவனித்துள்ளார். இதனால் தென்னை மரத்தின் மீது காக்கா கட்டிருக்கும் கூட்டில் நகை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் உறவினர் ஒருவரை மரத்தின் மீது ஏறி பார்க்க கூறியுள்ளனர்.

அப்போது மரத்தின் உச்சியில் காக்கா கூட்டில் தங்க வளையல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செயினும் மரத்திலிருந்து தான் கீழே விழுந்து இருக்கும் என்று புரிந்து கொண்டனர். நகை கிடைத்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் முந்தைய காலத்தில் காக்கா வடையை தூக்கி சென்றதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இப்போது நகையை தூக்கி சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.