
நாமக்கல் மாவட்டத்தில் நடராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியின் மீது மோதியது. இதில் மினி லாரிலிருந்து மீன்கள் சிதறி சாலையில் கொட்டியது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையில் கிடந்த மீன்கள் மீது ஏற்றி இறக்கியதால் மீன்கள் சிதைந்தன.
சில மீன்கள் ரோட்டில் துள்ளி குதித்தன. இதை கண்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து டிரைவருக்கு என்ன ஆனது என்று கூட பாராமல், சாலையில் சிதறி கிடந்த மீன்களை சாக்கு பைகளிலும், பாத்திரங்களிலும் அள்ளி சென்றனர். மேலும் சிலர் தங்கள் லுங்கி மற்றும் சேலைகளில் போட்டுக்கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின் காயமடைந்த டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.