ஆணுக்கும் பெண்ணுக்கும் குறைந்தபட்ச திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்தியாயா அவர்கள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “குறைந்தபட்ச திருமண வயதாக பெண்களுக்கு 18-ம் ஆண்களுக்கு 21-ம் இருக்க வேண்டும் என்று பல சட்டங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் கௌரவம், பாலின நீதி, பாலின சமத்துவம் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இரு பாலருக்கும் குறைந்தபட்ச திருமண வயது என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இது தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் இருந்து இரண்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட் உள்ளிட்ட அமர்வு விசாரித்த போது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். நீதிமன்றத்தில் சட்டங்களை இயற்ற முடியாது என்று தெரிவித்ததோடு உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சாசனத்தின் ஒரே பாதுகாவலர் என்று நினைக்க வேண்டாம் நாடாளுமன்றமும் அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் தான் என தெரிவித்துள்ளனர்.