மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் மராத்தியில் பேசுவது கட்டாயம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மராத்தியில் பேசாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் புகார் அளிக்கவும் இந்த உத்தரவு உதவுகின்றது. இதில் மராத்தி மொழி கொள்கையின்படி அரசு அலுவலகங்களில் தகவல் தொடர்பு மொழி இனி மராத்தியக இருக்கும் எனவும், அரசு மாநகராட்சி உள்ளாட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மராத்தியில் பேசுவது கட்டாயமாக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு எந்த ஊழியர் மராத்தியில் பேசவில்லையோ அந்த ஊழியர் மீது புகார் அளிக்கவும் துறை தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில சட்டமன்றத்தில் மராத்தி மொழி குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  இக்கொள்கையின் படி மாநில அரசு துறைகளால் வழங்கப்படும் விண்ணப்பங்கள் சைன் போர்டுகள் மற்றும் விளம்பரங்களும் மராட்டியில் மட்டுமே இருக்கும் எனவும், புதிய வழிகாட்டுதல்கள் மத்திய அரசின் கொள்கையின்படி வங்கிகள் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் சம்பந்தப்பட்ட பிராந்திய மொழி ஆகிய 3 மொழிக் கொள்கையை கட்டாயமாக்குகின்றது.