
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல்கள் நடத்தி வந்து உள்ளனர். இந்த நிலையில் காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின்படி வனப்பகுதியில் நேற்று இரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் இருந்தனர். இந்த நிலையில் திடீரென மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு குழு தலைவர் ஆன விக்ரம் கவுடா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை இன்று காலை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதேபோன்று கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தாக்குதலில் ஒரு முக்கியமான மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியான சாகேட் ராஜன் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு அடுத்து இந்தப் பகுதியில் நடந்த இரண்டாவது என்கவுண்டர் இதுவாகும். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என காவல்துறையினர் உறுதியளித்து உள்ளனர். விக்ரம் கவுடாவின் என்கவுண்டர் மாவோயிஸ்ட் குழு உறுப்பினர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் இனி அவர்களது குழு பலவீனமடையும் என காவல்துறையினர் உறுதியாக கூறுகின்றனர்.