சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தம்பதியினர் பீகார் சென்றனர். இதனால் தங்களது மகளை அவருடன் படிக்கும் பீகாரை சேர்ந்த சக மாணவியின் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அந்த வீட்டில் காவலாளியாக பீகாரைச் சேர்ந்த ராகுல்குமார் தந்தி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாணவி குளிக்கும்போது மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை வாங்கியதோடு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ராகுல் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ராகுல் குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.