தமிழகத்தில் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி அமைச்சர் நாசருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் இன்று முதல் ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆவின் பால் விற்பனை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என்று ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும் வதந்திகளையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம். கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது. ஆவின் மற்றும் பால்வளத்துறையின் கள அலுவலர்கள் சங்கங்களில் முழு வீச்சில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.