கேரள மாநிலத்தில் மார்ச் 9-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு துவங்கும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “எஸ்எஸ்எல்சி, மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது.

எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 9ம் தேதி துவங்கி மார்ச் 29ம் தேதி முடிவடைகிறது. நடப்பு ஆண்டு தேர்வை 4,19,554 பேர் எழுதுகின்றனர்.  அரசு உதவி பெறும் பிரிவில் 1,421 தேர்வு மையங்களும், உதவிபெறாத மண்டலத்தில் 369 தேர்வு மையங்களும் என மொத்தம் 2,960 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வளைகுடா பகுதியில் 518 மாணவர்களும், லட்சத்தீவிலுள்ள 9 பள்ளிகளில் 289 மாணவர்களும் நடப்பு ஆண்டு தேர்வு எழுதுகின்றனர். விடைத்தாள்கள் திருத்தும் பணியானது 70 முகாம்களில் ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடங்கும். அதனை தொடர்ந்து மே 2023 இரண்டாவது வாரத்தில் முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.