அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் வளவெட்டி குப்பம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தமிழ்பொன்னி(21) அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அதே கல்லூரியில் கோவிந்தன் புத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப்(20) என்பவரும் படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்பொன்னியும் முகமதுவும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 12-ஆம் தேதி தமிழ் பொன்னிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. வருகிற 27-ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட தமிழ்பொன்னி தனது காதலன் முகமது யூசுப்புடன் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. நாங்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி திருமண வயதை எட்டாததால் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்பொன்னி மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே நாங்கள் தொடர்ந்து படிக்க ஏதுவாக காப்பகத்தில் தங்கவும், பாதுகாப்பு அளிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.