
அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள பிராடென்டன் பகுதியில் BD குல்லெட் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஜாரெட் வில்லியம்ஸ் என்பவர் காதல் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை ரகசியமாக வைத்துக் கொள்…யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று ஆசிரியர் சிறுமியிடம் கூறியுள்ளார்.
தற்போது இந்த கடிதத்தை சிறுமியின் தாய் கண்டறிந்தார். அந்த கடிதத்தில் இருந்ததை படித்ததும் அதிர்ச்சி அடைந்த தாய் ஆசிரியர் ஜாரெட் வில்லியம்ஸ் மீது பள்ளி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதன் பின் பள்ளிக்குச் சென்ற சிறுமியின் தாய் “இந்த ஆசிரியர் என் மகளிடம் தவறாக நடந்து இருக்கிறார். என் மகளின் குழந்தை தனத்தை இந்த ஆசிரியர் பயன்படுத்திக் கொண்டார். என் மகள் கனவிலும் அழுகிறார். ஆசிரியரின் இந்த செயல் எனது மகளுக்கு பயங்கரமான மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
இதைத் தொடர்ந்து மனடீ கவுண்டி பள்ளி நிர்வாகம் ஜாரெட் வில்லியம்சை குழந்தைகள் தொடர்பிலாத வேலைக்கு பணி மாற்றம் செய்துள்ளனர். இருப்பினும், அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியதால் கடந்த 23ஆம் தேதி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.