2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுக – ஐ.யூ.எம்.எல் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம் எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அகில இந்திய கட்சி என்பதால் ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல 2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில்  வேட்பாளர் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

தொகுதி ஒதுக்கீடு செய்தபின் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அளித்த பேட்டியில், “கொ.ம.தே.க – திமுக கூட்டணி உறுதியான கூட்டணியாக இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். திமுக கூட்டணி கட்சிகள் விரைவில் தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்குவோம். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். நாமக்கல்லில் யார் வேட்பாளர் என்பதை கொ.ம.தே.க செயற்குழு கூடி விரைவில் அறிவிக்கும். நாமக்கல் தொகுதியில் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.