முன்னாள் ட்விட்டர் எனப்படும் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாக்கரினோ, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை அவர் தானே எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “எக்ஸ் நிறுவனத்தை மாற்றும் இந்த வேலை என் வாழ்க்கையின் மிகப்பெரிய வாய்ப்பு. சுதந்திரமான கருத்துகளை பாதுகாக்க நான் மேற்கொண்ட முயற்சிக்கு எலான் மஸ்க் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று அவர் பதிவு செய்துள்ளார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “உங்கள் பங்களிப்புக்கு நன்றி” என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

இது ஒரு சாதாரண ராஜினாமா அல்ல என்று பலரும் கருதுகிறார்கள். ஏனென்றால், எலான் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய ‘க்ரொக்’ என்ற ஏ.ஐ. சாட்பாட் சமீபத்தில் ஹிட்லர் மற்றும் இனவெறி சார்ந்த பதில்களை வழங்கியது. இது பலரிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இதனுடன் தொடர்புடைய சர்ச்சையிலிருந்து விடுபடவே லிண்டா ராஜினாமா செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், கடந்த சில மாதங்களாக மஸ்க் மற்றும் லிண்டா இடையே பதவி பொறுப்புகள் மற்றும் முடிவெடுப்புகளில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாம். லிண்டா யார் அழுத்தத்தில் வெளியேறினார், அல்லது வேறு காரணமா என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், “அடுத்த CEO யார்?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.