ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிக்கு பெரும் பின்னடைவாக மதீஷா பத்திரனாவின் காயம் அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் போது, அவருக்கு காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது.

இதனால் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த ஏலத்தில் 18 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்ட பத்திரனா, தொடரின் ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இலங்கையிலேயே தங்கி காயத்திலிருந்து மீண்டு வரும் பத்திரனா, தான் இன்னும் இந்தியாவிற்கு பயணம் செய்யவில்லை என்பதையும், காயத்திற்கான மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வருவதையும் சமூக வலைதளம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அவர் முழுமையாக குணமடைய இன்னும் 3 முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவும் காயத்துடன் போராடி வரும் சூழலில், பத்திரனாவின் இந்த நிலை கேகேஆர் அணியின் பந்துவீச்சு வியூகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.