காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையம், சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பல போராட்டங்கள் மேற்கொண்டதுடன்,  கிராமசபை கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ,

இருந்தபோதிலும், சமீபத்தில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது, போராட்டம் நடத்திய கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் எதிரொலியாக, ஏகனாபுரத்தை மையமாகக் கொண்ட 13 கிராம மக்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் உத்தரவை திரும்பப் பெறும் வரை, தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி,

புதிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த காலவரையற்ற புறக்கணிப்பில் ஏகனாபுரம் பகுதியில் 111 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் நாகப்பட்டு நெல்வாய் மற்றும் மெளலாரி கிராமங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில் விமான நிலைய திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பின் சூழலை தீவிரப்படுத்துகிறது.