களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவம் எந்தவித கலவரத்திற்கும் காரணம் ஆகிவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் முதலமைச்சர் பினராய் விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்து உள்ளார். இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது டெல்லியில் இருந்த பினராய் விஜயனுக்கு அங்கிருந்து அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம்,  அதன் தாக்கம் குறித்த தகவல்களை அனைத்தையும் தெரிவித்தனர்.

அதன்பிறகு பினராய் விஜயன் டெல்லியில் இருந்து புறப்பட்டு தற்போது கேரளா பயணித்துக் கொண்டிருக்கிறார். இன்று மாலையில் கேரளா வந்து சேர்வார் என்றும்,  கேரளா வந்து சேர்ந்தது  அனைத்து விபரங்களையும் இன்று இரவிலே கேட்டு அறிந்து,  பின்னர் நாளை காலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக ஏற்கனவே பினராய் விஜயன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்திலே இந்த வெடிகுண்டு சம்பவத்தை வாய்ப்பாக பயன்படுத்தி வன்முறையை தூண்ட யாரும் முயற்சி செய்யக் கூடாது எனவும் கேரளா போலீசார் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மதத்தவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும் தற்போது இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம் கேரளாவில் பல்வேறு போராட்டங்களுக்கு காரணியாக இருந்து வரும் நிலையிலே,  இத்தகைய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இதை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என அரசியல் ரீதியாக கருதப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பினராய் விஜயனுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அதேபோலவே பல்வேறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை பினராய் விஜயன்  தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.  முழு விசாரணை ஒருபுறம்,  குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். அதே சமயத்திலேயே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக ஏதும் வன்முறை வெடித்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நாளை நடத்தப்படுகிறது.