பயனரின் கைப்பேசி மைக்ரோபோனை ரகசியமாக அணுகி பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சூழலில், அதுகுறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்து உள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக பணிபுரிபவர் ஃபோட் டாபிரி. இவா் டுவிட்டா் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தான் உறங்கும்போது தன் கைப்பேசியில் மைக்ரோஃபோனை ரகசியமாக வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது என குற்றஞ்சாட்டினாா்.

அதுகுறித்த புகைப்படத்தையும் அப்பதிவில் அவா் தெரிவித்திருந்தாா். ஃபோட் டாபிரி உறங்கிக்கொண்டிருந்ததாக சொல்லப்படும் வேளையில், அவரின் கைப்பேசி மைக்ரோபோனை வாட்ஸ்அப் ரகசியமாக அணுகி அதை பல நேரங்களில் பயன்படுத்தியுள்ளது அப்புகைப்படத்தில் தெரிகிறது. இக்குற்றச்சாட்டு குறித்து மத்திய இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், வாட்ஸ்அப் மீதான குற்றச்சாட்டு அந்தரங்க அத்துமீறல். ஆகவே இதை ஏற்க முடியாது. இதுபற்றி உடனே விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.