கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். அவருடைய மகன் பிரகாஷ் கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு தமிழரசி (30) என்ற மனைவியும், தியாசாய்(4) என்ற மகனும், ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தமிழரசியின் தங்கை தனலட்சுமி(24) என்பவர் ஊழியராக பணியாற்றிய போது அவருடன் தொழிநுட்ப ஊழியராக பணியாற்றியவர் சற்குரு(32). சிதம்பரத்தை சேர்ந்த இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், தனலட்சுமி காதலித்து திருமணம் செய்து, லக்ஷன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் தனலட்சுமிக்கும், சற்குருவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். சம்பவத்தன்று தனலட்சுமி தனது தாய் செல்வி (50) மற்றும் குழந்தை லக்ஷனுடன் நேற்று காலை செல்லங்குப்பத்தில் உள்ள அக்காள் தமிழரசியின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து சற்குருவும் கையில் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார். பின் அங்கு வைத்து குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றியதில்  சற்குரு ஆத்திரமடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டை உள்பக்கமாக பூட்டிய சற்குரு, தன் கையில் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனலட்சுமி, தமிழரசி, செல்வி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றியும், பின் தன்மீதும் ஊற்றிக்கொண்டும் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அனைவரது உடலிலும் தீ பற்றி எரிந்ததில், தனலட்சுமி, செல்வி, சற்குரு ஆகியோர் கதவை திறந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் தமிழரசி, அவரது குழந்தை ஹாசினி, சற்குருவின் மகன் லக்ஷன் ஆகிய மூவரும் வீட்டிற்குள்ளே உடல் கருகி உயிரிழந்தனர். பின் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு, பலத்த காயம் அடைந்த தனலட்சுமி, செல்வி, சற்குரு மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சற்குரு, தனலட்சுமி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் செல்வியை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டு, வேலையில் இருந்து வந்த  பிரகாஷ் மற்றும் அவரது  எல்.கே.ஜி. படிக்கும் மகன் இருவரும் பலியானவர்களின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி  காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இது குறித்து வழக்குபதிவு  செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.