ஹைதராபாத்தில் உள்ள ஷெரிகுடா கிராமத்தைச் சேர்ந்த குஜ்ஜா கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் இருவர், சாகர் சாலையில் உள்ள மெஹ்ஃபில் உணவகத்திற்குச் சென்றனர். அங்கு சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்த அவர்கள், உணவு பரிமாறப்பட்ட பிறகு அதில் வறுத்த பல்லி இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உணவக மேலாளரிடம் கேள்வி எழுப்பிய போது, “இது நன்றாக வறுத்திருக்கிறது, நீங்கள் அதை சாப்பிடலாம்” என பதிலளித்ததாக கூறப்படுகிறது. மேலாளரின் இந்தக் கண்டிப்பான மற்றும் அக்கறையற்ற பதிலால் கிருஷ்ணா ரெட்டி மற்றும் நண்பர்கள் மிகுந்த கோபமடைந்து, நேரில் இப்ராஹிம்பட்டினம் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.

 

இதனையடுத்து போலீசார் உணவக மேலாளர் ரசாக்கை விசாரணைக்காக அழைத்தனர். மேலும் அவர்மீது சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணா ரெட்டி, உணவகத்தின்மீது இப்ராஹிம்பட்டினம் நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்துள்ளார்.

உணவகத்தின் சுகாதார நிலை மற்றும் உணவு தரம் தொடர்பாக அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.