விசாகப்பட்டினத்தில் நடந்த பயங்கர சம்பவம் ஒரு தனித்து வாழ்ந்த பெண்ணின் உயிரை பறித்ததோடு, அவரது இரு குழந்தைகளை அநாதைகளாக்கியுள்ளது. ஸ்ரவண சந்தியாராணி என்ற 38 வயது பெண்மணி, தனது எட்டு வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் அக்கையபாலெம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஒரு குழந்தை மனநல குறைபாட்டுடனும், மற்றொரு குழந்தை நுரையீரல் நோயுடனும் இருந்தனர். கணவர் மணிகண்டன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட, பொருளாதார சிக்கல்களால் தவித்த சந்தியாராணி, ஒரு குழந்தையை விடுதியில் சேர்த்து மற்றொரு குழந்தையை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார்.

ஆனால், எதிர்பாராத வகையில், அவரது எதிர் வீட்டில் வசித்த கண்டிபள்ளி ஸ்ரீனிவாஸராவ் என்பவர், பழைய பகை காரணமாக அவரை பகிரங்கமாக கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் நடந்தது. சந்தியாராணி நடைப்பயிற்சிக்கு செல்லும்போது, ஸ்ரீனிவாஸராவ் பின்னால் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சந்தியாராணியின் ஸ்கூட்டர் இருக்கையை அறுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீனிவாஸராவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டிருந்தது. இதற்கு முன் இருவரும் நெருங்கிய பழக்கத்தில் இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஸ்ரீனிவாஸராவின் மற்றொரு பெண்ணுடனான தொடர்பை சந்தியாராணி கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்து இந்த கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளி ஸ்ரீனிவாஸராவ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தந்தை இல்லாத நிலையில், தாயையும் இழந்த இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஒரு குழந்தை விடுதியில் இருக்க, மற்றொரு குழந்தைக்கு தற்காலிக பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் இல்லாததால், இவர்களுக்கு உதவ ஜனநேய உள்ளங்கள் முன்வர வேண்டும் என உள்ளூர்வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.