
வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கான கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்படும் போது, அதிலிருந்து வீட்டு இணைப்புகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வீடுகளைத் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற மின் இணைப்புகள் அனைத்துக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தின் வரலாற்றில் 3 ஆண்டுகளில் 4 முறை மொத்தம் சுமார் ரூ.45 ஆயிரம் கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய மனிதநேயமற்ற அரசு திராவிட மாடல் அரசு தான். வீடுகளுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று அரசு அறிவித்திருப்பது மக்களின் மீதுள்ள கருணையால் அல்ல, மாறாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறதே என்ற அச்சத்தால் தான்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, 2023ஆம் ஆண்டில் வீடுகளுக்கான மின்கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்த ஆட்சியாளர்கள், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட்டு, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிவடைந்த பிறகு, பின்தேதியிட்டு வீடுகளுக்கும் சேர்த்து மின்கட்டணத்தை உயர்த்தியவர்கள் தான் என்பதை தமிழ்நாடு மறக்கவில்லை. எனவே, வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் தான்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத் துடிப்பது சரியல்ல.
எனவே, வணிகம் மற்றும் தொழில்துறையினரை பாதுகாக்கும் வகையில் வீடுகளுக்கு மட்டுமின்றி, கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.