காசா நகரத்தில் தரை, கப்பல், விமானம் என முப்படை தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இதனால் மனித உரிமை மீறல் உச்சத்தில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.  போர் தீவிரமடையும் என்பதால் காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. காசாவில் இருந்து மக்கள் உடனே வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்த நிலையில் ஐநா முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது.

காசாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம். கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் இருப்பதால் வெளியேற்றுவது சிரமம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .காசா பகுதியில் ஐந்து நகரங்கள் உள்ளன. இதில் தோராயமாக 50,000 மேற்பட்ட கர்ப்பிணிகள் இருப்பதாக ஐநாவால் மதிப்பிடப்படுகிறது. இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள், 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் குடிநீர், உணவு இல்லாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.  குழந்தைகளுடைய எண்ணிக்கையும் 6 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 22 லட்சம் மக்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பெண்களாக இருக்கின்றனர், கர்ப்பிணிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லாததால் காசா நகரமே இருளில் மூழ்கியுள்ளது. இணைய சேவையும் இல்லாத காரணத்தினால் அந்த நகரமே  சீர்குலைந்து  நிலையில் தான் இருக்கிறது.

எகிப்து எல்லையில் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு வெளியேறுவதற்காக பாலஸ்தீன மக்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வடக்கு பகுதிகளிலிருந்து வெளியேற முடியாது அளவிற்கு இஸ்ரேல் ராணுவத்தின் உடைய பீரங்கியும் தற்போது  முற்றுகையிட்டு வருகிறது. இதனால் பதற்றமான  ஒரு சூழல் நிலவுகிறது.

அங்கே இருக்கும் பாலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இதை உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தலைவர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.  சர்வதேச அளவில் கடந்த ஒரு வாரமாக இந்த விஷயம் மிகப்பெரிய ஒரு அதிர்வலையையும்,  அனைத்து நாடுகளுக்கு இடையே ஒரு விவாதத்தையும்,  பொருளாதார ரீதியான பெரிய அளவிலான மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.