இஸ்ரேல்- காசா போர்க் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதனால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்து பதிலடி கொடுத்தது. அதன் பின் நடந்த தொடர் தாக்குதலால் காசாவில் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் குறிப்பாக குழந்தைகள், பெண்கள் பலர் பலியாகி உள்ளனர். இதனிடையே இஸ்ரேல் உலக நாடுகளின் அழுத்தத்தால் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. அதன் பின் சில நாட்கள் கழித்து காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. மேலும் அதனைத் தொடர்ந்து காசாவினுள் அடிப்படை தேவைகளான உணவு முதலியவற்றை இஸ்ரேல் நிறுத்தியது.

இதனால் காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் பஞ்சத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் 3 நிபந்தனைகள் விதித்துள்ளது. அதாவது இஸ்ரேலின் பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். ஹமாஸ் அமைப்பினர் நாடு கடத்தப்பட வேண்டும்.

காசாவில் எந்த ஆயுதங்களும் இருக்கக் கூடாது என நிபந்தனைகள் விதித்துள்ளது. மேலும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் தற்போது காசாவுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.