மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பிதுல் பகுதியில் தன்வி தபாண்டே என்பவர் வசித்து வந்தார். இவர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோட் என்னும் கிராமத்தில் ஒப்பந்த பணியில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது சொந்த ஊருக்கு பணி மாறுதல் கேட்டு தன்வி விண்ணப்பித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் தன்விக்கு பணி மாறுதல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் செவிலியர் விடுதியில் தன்வி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ பணியாளர்கள் அறையில் சடலமாக இருந்த தன்வியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தன்வி உயிரிழந்த 65 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அவருக்கு பணி மாறுதலுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.