டிஎல்எஸ் விதியின் கீழ் நடந்த முதல் டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது..

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் (டிஎல்எஸ்) முறையில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று ஆகஸ்ட் 18 (வெள்ளிக்கிழமை) அன்று டப்ளின் மலாஹிட் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், அயர்லாந்து அணி இந்தியாவுக்கு 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து ஆடிய இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாததால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணிக்கு 140 ரன்கள் இலக்காக அயர்லாந்து நிர்ணயித்தது :

பாரி மெக்கார்த்தி (51 நாட் அவுட்) மற்றும் கர்டிஸ் கேம்பர் (39) ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியதால் அயர்லாந்து  முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 140 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. அயர்லாந்து 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மெக்கார்த்தியின் அரை சதம் இந்தியாவுக்கு சவாலான ஸ்கோரை எட்ட உதவியது. மெக்கார்த்தி 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் டீம் இந்தியாவுக்கு எதிராக 8வது பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது :

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதே போல, 11 மாதங்களுக்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய இந்தப் போட்டியில், பிரசித் கிருஷ்ணா மற்றும் ரின்கு சிங் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் 2வது பந்தில்  ஜஸ்பிரித் பும்ரா, ஆண்ட்ரூ பால்பிர்னி (4) மற்றும்  ஓவரின் 5வது பந்தில் லோர்கன் டக்கர் (0) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து ஹாரி டெக்டர் (16 பந்து, 9 ரன்), பால் ஸ்டிர்லிங் (11 பந்து, 11 ரன்) ஆகியோர் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரின் ஓவரில் அவுட் ஆகினர். பவர்பிளே முடிந்த உடனேயே, மீண்டும் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் ஜார்ஜ் டோக்ரெல் 1 ரன்னுக்கு அவுட் ஆக அயர்லாந்து 31 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

பாதி அணி பெவிலியன் திரும்பிய பிறகு அயர்லாந்தின் இன்னிங்ஸின் பொறுப்பை கர்டிஸ் கேம்பர் ஏற்றுக்கொண்டார். மார்க் அடேரும் (16 பந்துகள், 16 ரன்கள்)  சிறிது நேரம் தாக்குப்பிடித்து  ஆட்டமிழந்தார், அதன் பிறகு பாரி மெக்கார்த்தி கேம்பருடன் இணைந்தார். கேம்பர் ஜஸ்பிரித் பும்ராவின் 16வது ஓவரில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் விளாசினார். அதே, அடுத்த ஓவரில், மெக்கார்த்தி 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இரண்டு பேட்ஸ்மேன்களும் 44 பந்துகளில் 57 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அயர்லாந்தை கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார்கள்.

33 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்திருந்த கேம்பர் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார், ஆனால் மெக்கார்த்தியின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது. ஜஸ்பிரித் பும்ரா 19வது ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தனது ஸ்பெல்லை முடித்தார், ஆனால் மெக்கார்த்தி 20வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்தார். மேலும் டி20 சர்வதேசப் போட்டிகளில் தனது முதல் அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இந்திய அணியில் பந்து வீச்சில் பும்ரா 4 ஓவர்களில் 2/24, பிஷ்னோய் 4 ஓவர் (23 ரன், 2 விக்கெட்), பிரசித் கிருஷ்ணா 4 ஓவர் (32 ரன், 2 விக்கெட்)  அர்ஷ்தீப் 4 ஓவர் ( 35 ரன்கள், ஒரு விக்கெட்).

இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்:

இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.. இதனால் மென் இன் ப்ளூ அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்தது. இன்னிங்ஸின் 7வது ஓவரில், கிரேக் யங் டீம் இந்தியாவுக்கு 2 விக்கெட் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார். கிரேக் யங் ஓவரின் 2வது பந்தில் முதலில், கேப்டன் பால் ஸ்டிர்லிங்கிடம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேட்ச் கொடுத்து அவுட்ஆனார் .யஷஸ்வி ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 24 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதற்குப் பிறகு, கிரேக் யங் அடுத்த பந்திலேயே திலக் வர்மாவை லோர்கன் டக்கரின் பிடியில் சிக்க வைத்தார். திலக் வர்மா டக் அவுட் ஆனார். அதே போல், திலக் ஆட்டமிழந்த பிறகு, இந்திய இன்னிங்ஸில் 2 பந்துகள் மட்டுமே விளையாட முடிந்தது. சஞ்சு சாம்சன் 1 மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களுடன் (ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி நாளை நடைபெறும்.