
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்ற 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 31 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் களைகட்டியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்களை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி வருகின்றனர். அதற்காக எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக இருக்கும் ரசிகர்களை குறிவைத்து மோசடி கும்பல் வலை விரித்து வருகிறது .
அந்தவகையில் சேப்பாக்கத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சென்னை – மும்பை அணி போட்டிக்கான டிக்கெட் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியதில் டிக்கெட் விற்க முயன்ற ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மொத்தம் 11 பேரிடம் இருந்து 53 ஆயிரத்து 350 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .மேலும் காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.