ஐபிஎல் வரலாற்றில் 2வது வேகமான பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ஜெரால்டு கோட்ஸி. 

2024 ஐபிஎல் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 127 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து 3வது வெற்றி பெற்றுள்ளது.

யூஸ்வேந்திர சாஹல் மற்றும் ட்ரெண்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசியது மற்றும் ரியான் பராக்கின் (54 ரன்கள்) அற்புதமான இன்னிங்ஸ் ராஜஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம் ராஜஸ்தான் ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவிய போதிலும், அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி  அமைதியாக ஒரு சாதனையை முறியடித்துள்ளார். ஆட்டத்தின் 16 வது ஓவரின் 3வது பந்தை ஜெரால்ட் கோட்ஸி ரியான் பராக்கிற்கு 157.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி உள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது வேகமான பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.  ஐபிஎல் வரலாற்றில் ஷான் டைட் 157.71 கி.மீ வேகத்தில் வீசி முதலிடத்தில் நீடிக்கிறார். அதே சமயம் ஐபிஎல் 2024 இல் வேகமான பந்துவீச்சாளராக  முதலிடத்தில் உள்ளார் ஜெரால்ட் கோட்ஸி. முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிராக மணிக்கு 155.8 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய லக்னோ வீரரான 21 வயது இந்திய பந்துவீச்சாளர் மயங்க் யாதவ்வின் முந்தைய சாதனையை கோட்ஸி முறியடித்துள்ளார்.

ஐபிஎல் 2024ல் இதுவரை நடந்த வேகமான டெலிவரிகள் :

பெயர் வேகம்           –     (கி.மீ.) அணி (vs)

ஜெரால்ட் கோட்ஸி – மணிக்கு 157.4 கி.மீ (ஆர்.ஆர்)

மயங்க் யாதவ் – மணிக்கு 155.8 கி.மீ (பிபிகேஎஸ்)

மயங்க் யாதவ் – மணிக்கு 153.9 கி.மீ (பிபிகேஎஸ்)

மயங்க் யாதவ் – மணிக்கு 153.4 கி.மீ (பிபிகேஎஸ்)

நந்த்ரே பர்கர் – மணிக்கு 153 கி.மீ (ஆர்.ஆர்)