நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 22 மற்றும் 29ஆம் தேதிகளில் தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த அனைத்து மனுகளும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மற்றும் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர்.

அவர்கள் தங்களது வாதத்தில், அனுமதி கோரி RSS அளித்த விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை எனவும்,  பேரணிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டுள்ள அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி  கோரும் வழித்தடத்தில் மசூதிகள் தேவாலயங்கள்,  மற்றும் குடியிருப்புகள் உள்ளதாகவும்,

அனுமதி கோரிய விண்ணப்பத்தில் அகண்ட பாரதம் கட்டமைப்போம் என கூறியுள்ளதாகவும், அந்த வரைபடத்தில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை இணைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அதனால் அரசுக்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பினார் ? அதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர்,  இது மிகவும் முக்கியமான விகாரம். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும்,  இந்த பேரணியால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கடந்த முறை பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி நிலையில் தற்போதும் அனுமதி வழங்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு.

தற்போதைய வாதத்தையே கடந்த முறையும் காவல்துறை முன் வைத்தது. அனைத்து அம்சங்களையும்,  கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கி தான் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி அளித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை கூறி அரசு அனுமதி மறுத்து வருகிறது. அகண்ட பாரதம் அமைப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையை எந்த காரணமும் இன்றி மறுக்கக்கூடாது.

ஜாதகத்தை தவிர அனைத்து தகவலும் போலீசார் கேட்டு பெற்றுள்ளனர் என வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் போல அனுமதி கோரும் பிற அமைப்பினரிடமும் கேள்வி கேட்கப்படுமா ? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு யார் அனுமதி கோரினாலும் அரசு சார்பில் கேள்வி கேட்கப்படும் என தெரிவித்த நிலையில்,  வாதம் பிரதிவாதங்களைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி,

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு போலீஸ் கூறிய காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். உள்ளூர் நிர்வாகங்களை பொறுத்து நியாயமான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதிக்கலாம். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்தலாம். சீருடை இல்லாமல் பேரணியில் யாரும் அனுமதிக்க கூடாது.

22ஆம் தேதி அணிவகுப்புக்கான வழித்தடத்தை  20ஆம் தேதிக்குள்ளும்,  29ஆம் தேதிக்கான வழித்தடத்தை ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் இறுதி செய்ய வேண்டும். வழித்தடத்தில் ஏதேனும் மாற்றம் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து ஆலோசனை முடிவு எடுக்க வேண்டும். பேரணி தொடங்குமிடம்,  பேரணி நிறைவடையும் இடத்தில்  எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு போலீஸ் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். அதேபோல் அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.