இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி..

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7:00 மணிக்கு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை குவித்தது.

அதிகபட்சமாக தீபக் ஹூடா 23 பந்துகளில் (4 சிக்ஸ், ஒரு பவுண்டரி) 41* ரன்களும், இஷான் கிஷன் 29 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். மேலும் அக்சர் படேல் 31* (20) ரன்களும்,  ஹர்திக் பாண்டியா 29 ரன்களும் எடுத்தனர்.இலங்கை அணியில் தீக்ஷனா, மதுஷங்கா, கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, ஹசராங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் பதும் நிசாங்கா ஒரு ரன்னில் மாவியின் 2ஆவது ஓவரில் அவுட் ஆனார். அதன்பின் குஷால் மெண்டிசுடன் தனஞ்செயா டி சில்வா கைகோர்த்தநிலையில், டி சில்வாவையும் 8 ரன்னில் அவுட் செய்து வெளியேற்றினார் மாவி.. அதனைத்தொடர்ந்து வந்த அசலங்கா 12, ஓரளவு தாக்குபிடித்த துவக்க வீரர் குஷால் மெண்டிஸ் 28 ரன்னிலும், ராஜபக்சே 10 என அடுத்தடுத்து அவுட்டாகினர். இலங்கை அணி 10.4 ஓவரில் 68/5 என இக்கட்டான நிலையில் இருந்தது.

இதையடுத்து கேப்டன் தசுன் ஷானகாவும், ஹசரங்காவும்  ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் ஹசரங்கா 21 (10) ரன்னில் இக்கட்டான நிலையில் அவுட் ஆனார். அதன்பின் கடைசி 24 பந்தில் 40 ரன்கள் இலங்கை வெற்றிக்கு தேவைப்பட்டது. உம்ரன் மாலிக் 17வது ஓவரில் ஷானகா சிக்ஸர் அடித்தார். இருப்பினும் 8 ரன்கள் கொடுத்து 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த ஷானகா விக்கெட்டை எடுத்தார்.

இதையடுத்து தீக்ஷ்னா – கருணாரத்னே இருவரும் களத்தில் இருந்தனர். 18 பந்துகளில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18வது ஓவரில் சிவம் மாவி சிறப்பாக பந்து வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து தீக்ஷ்னா (1) விக்கெட்டை எடுத்தார். கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். அந்த ஓவரில் கருணரத்னே ஒரு சிக்ஸ் அடித்தது உட்பட 16 ரன்கள் கிடைத்தது. இதனால் ஆட்டம் சற்று பரபரப்பானது.

இறுதியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கருணாரத்னேவும், ரஜிதாவும் களத்தில் நின்றனர். ஹர்திக் பாண்டியா அக்சர் படேலிடம் ஓவரை கொடுத்தார். அக்சர் படேல் முதல் பந்தை வைடாக வீசினார். பின் முதல் பந்தில் ரஜிதா ஒரு ரன் எடுத்தார். கருணாரத்னே ஸ்ட்ரைக் வந்தார். இரண்டாவது பந்து டாட் பால் ஆனது. 3ஆவது பந்தில் கருணாரத்னே ஒரு அட்டகாசமான சிக்சர் அடித்தார். இதனால் ஸ்ரீலங்கா வெற்றிக்கு 3 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

அதன்பின் 4ஆவது பந்தும் டாட் பால் ஆனது. இரண்டு பந்தில் 5 ரன்கள் தேவை என பரபரப்பு ஏற்பட்டது. 5ஆவது பந்தில் கருணாரத்னே அடித்து விட்டு 2 ரன்கள் ஓடிய போது ரஜிதா (5) ரன் அவுட் ஆனார். கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி பந்தில் கருணாரத்னே வால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கருணாரத்னே 23 (16) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். மதுஷாங்கா கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சில் சிவம் மாவி 4 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயில் நடக்கிறது..