
இந்தியாவின் ஆபரேஷன் சிந்ததூர் நடவடிக்கையை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டின் எல்லைகளிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. இதனைஅடுத்து இரு நாட்டு எல்லைகளில் உள்ள மாநிலங்களும் பதற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். அங்கு தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் அந்த மாநிலங்களில் நேற்று சில நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், குஜராத் மாநிலத்தில் நடத்தப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பட்டாசு வெடிக்க கூடாது எனவும், ட்ரோன்கள் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே குஜராத்தில் உள்ள நகரங்களில் ட்ரோன்கள் பறக்க விடக்கூடாது என அறிவித்துள்ளார். மேலும் இந்த தடை உத்தரவு மே 15 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும், அதற்கு குஜராத் மாநில மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.