டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா சென்றடைந்த இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டி20 தொடர் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே டிசம்பர் 10 முதல் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் மீண்டும் சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பகிர்ந்துள்ளது.

பிசிசிஐ தனது எக்ஸ்-இல் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், தென்னாப்பிரிக்காவை சென்றடையும் டீம் இந்திய வீரர்கள் பயணம் காட்டப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் மழை பெய்யத் தொடங்கியதை இந்த வீடியோவில் காணலாம். இதனால் வீரர்கள் பலர் தள்ளுவண்டி பைகளை தலையில் சுமந்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து, ஹோட்டலுக்கு வந்த இந்திய அணி வீரர்களுக்கு கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. சூர்யா, திலக், இஷான் கிஷன், ரிங்கு சிங், ருதுராஜ், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயஸ் ஐயர், சிராஜ்  உள்ளிட்ட பல வீரர்கள் வீடியோவில் காணப்பட்டனர். இதில் அனைத்து வீரர்களின் முகங்களிலும் புன்னகை மலர்ந்தது. இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 வடிவங்கள் கொண்ட தொடரில் விளையாட வேண்டும்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் கேஎல் ராகுல் தலைமையில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பிறகு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பெரும்பாலான இளம் வீரர்களுக்கு டீம் இந்தியா வாய்ப்பளித்துள்ளது. ரிங்கு சிங், ரஜத் படிதார், திலக் வர்மா உள்ளிட்ட பல இளம் வீரர்கள் களத்தில் காணப் போகிறார்கள். இந்த சூழ்நிலையில், இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் தங்களுடைய இடத்தை உறுதிப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் (ஒருநாள் தொடர்) தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.