தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 79 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய வீரர் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதலில் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கும், இந்தியா 153 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக  மார்க்ரம் அதிரடியாக 103 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றபடி யாருமே பெரிய அளவில்  எடுக்கவில்லை.

செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று 3ஆம் தேதி மதியம் 1:30 மணி முதல்நடைபெற்று வருகிறது.

இந்தபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் சென்றனர். தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக கைல் வெர்ரின்னே 15 ரன்களும், டேவிட் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்தனர். மற்றபடி அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இந்திய அணியில் முகமது சிராஜ் 9 ஓவர்கள் வீசி 3 மெய்டன் ஓவர்களுடன் 1.67 எக்கனாமியுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.  இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனபோதிலும், ரோஹித் சர்மா பொறுப்பாக தொடங்கிய நிலையில் 50 பந்துகளில் 39 ரன்களும், சுப்மன் கில் 55 பந்துகளில் 36 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலி 46 ரன்கள் எடுத்து 8வதாக தனது விக்கெட்டை இழந்தார். மேலும் கேஎல் ராகுல் 8 ரன்னிலும், அடுத்து வந்த வீரர்கள் அனைவருமே டக் அவுட் ஆக இந்திய அணி  34.5 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 153க்கு 5 விக்கெட் இழந்த நிலையில், தொடர்ந்து அதே ரன்னுக்கு இந்தியா அடுத்த 5 விக்கெட்டை பறிகொடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய 6 பேர் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்க அணியில் ரபாடா, லுங்கி எங்கிடி மற்றும் பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.. இதையடுத்து நேற்றே தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடியது.. முதல் நாளான நேற்று தென்னாப்பிரிக்கா அணி 62/3 என இருந்தது. எய்டன் மார்க்ரம் 36 மற்றும் டேவிட் பெடிங்காம் 11 ரன்களுடனும் இருந்தனர்.

இந்நிலையில் 2வது நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி ஒரு பக்கம் அடுத்தடுத்து விக்கெட் இழந்தாலும் எய்டன் மார்க்ரம் அதிரடியாக 103 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும் கேப்டன் டீன் எல்கர் 12, டேவிட் பெடிங்காம் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 11 ரன்களும் எடுத்தனர். மற்றபடி யாருமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் எடுக்கவில்லை.

இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். எனவே இந்திய அணி வெற்றி பெற 79 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச்க்கு பிறகு இந்திய அணி தற்போது களமிறங்கியுள்ளது..