ராகுல் திரிபாதி அலட்சியமாக ஷாட் ஆடி அவுட் ஆனதால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்..

ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியவுடன் ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்தனர். ஒருநாள் தொடர் முடிந்து டி20 தொடர் தொடங்கியபோது, ​​இந்தியாவின் தோல்வி குறித்து கோபத்தை வெளிப்படுத்தினர். கிரிக்கெட்டில் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது சகஜம். ஒரு போட்டியில் இந்திய அணி தோற்றால் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். அன்றைய போட்டியில் யார் சிறப்பாக செயல்பட்டார்களோ அவர்களை சமூக வலைதளங்களில் கொண்டாடும் ரசிகர்கள், மோசமாக செயல்பட்டால் விமர்சிக்கவும் தயங்குவதில்லை. அர்ஷ்தீப் சிங் தனது மோசமான பந்துவீச்சிற்காக ஏற்கனவே விமர்சனங்களைப் பெற்ற நிலையில், சமீபத்தில் ராகுல் திரிபாதியும் நெட்டிசன்களால் தாக்கப்படுகிறார்.

நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ராகுல் திரிபாதி ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் ஆட்டமிழந்த பிறகு கிரீஸுக்கு வந்த திரிபாதியால் 6 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. மேலும், ஜேக்கப் டஃபி பந்துவீச்சில் கவனக்குறைவாக ஷாட் ஆடி கீப்பர் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து திரும்பினார். விராட் கோலி டி20 போட்டிகளில் 3வது இடத்தில் இறங்குவார். தனது பேட்டிங்கால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார்.

சமீபத்தில், டி20 போட்டிகளில் இருந்து கோலி படிப்படியாக விலகியபோது சூர்யகுமார் அந்த இடத்தைப் பிடித்தார். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் சூர்யா 4ஆவது வீரராக இறங்கினார். கோலிக்கு பதிலாக ராகுல் திரிபாதி அனுப்பப்பட்டார். ஆனால், போராடி வரும் இந்திய அணிக்கு உதவும் பொறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு, அலட்சியமாக ஷாட் ஆடி, டக் அவுட் ஆனது ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. ஆனால் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் 3வது போட்டியில் திரிபாதி 35(16) 3வது இடத்தில் வந்து பேட்டிங்கில் ஜொலித்தார். ஆனால் நேற்றைய போட்டியில் சொதப்பினார்.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் திரிபாதியை தங்களுடைய பாணியில் ட்ரோல் செய்தனர். கோலிக்கு இடம் கொடுத்திருந்தால், அவர் இப்படியா அவுட்டாகி இருப்பார்” என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் சிலர் திரிபாதியை மன்னித்துள்ளனர். “அவர் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் அவர் அணியில் உள்ளார். இது அவருக்கு 3வது போட்டி. அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்..

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி எம்.எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது.  நியூசிலாந்து இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. 20 ஓவரில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

பின்னர் இன்னிங்ஸில் இலக்கை துரத்திய இந்திய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. இந்தியா 15 ரன்களில் 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது. அங்கிருந்து சூர்யகுமார் யாதவ் (47), ஹர்திக் பாண்டியா (21) ஆகியோர் இன்னிங்ஸை எடுத்து சென்றனர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 68 ரன்கள் சேர்த்தனர். பின் சூர்யா, ஹர்திக் அவுட் ஆக, கடைசியில் வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் விளாசி போராடியபோதும் இந்தியாவின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுக்க, கிவி (நியூசிலாந்து) அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.