நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பின், விக்கெட் இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்..

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி டெவோன் கான்வே (52), டாரில் மிட்செல் (59*) ஆகியோரின் அரைசதத்தால் 20 ஓவர் முழுவதும் விளையாடி 176/6 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய இந்திய அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. இந்திய அணி  15 ரன்களில் 3 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் இங்கிருந்து சூர்யகுமார் யாதவ் (47), ஹர்திக் பாண்டியா (21) ஆகியோர் கைகோர்த்து இலக்கை துரத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு  68 ரன்கள் சேர்த்தது. பின் இருவரும் அவுட் ஆக, கடைசியில் வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய போதிலும், இந்தியாவின் தோல்வியைத் தழுவியது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுக்க, கிவி (நியூசிலாந்து) அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி பின்தங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில்  கேப்டன் ஹர்திக் பாண்டியா (கேப்டன் டீம் இந்தியா) தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார். விக்கெட் இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. இதனால் இரு அணிகளும் ஆச்சரியமடைந்தனர், ஆனால் அவர்கள் அதில் சிறப்பாக விளையாடினர் மற்றும் முடிவு அவர்களுக்கு சாதகமாக சென்றது. உண்மையில், புதிய பந்து பழையதை விட அதிக டர்ன் எடுத்தது, அது சுழன்று துள்ளிய விதம் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்றார் ஹர்திக் பாண்டியா.

மேலும் பேசிய அவர், இடைவேளையின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், கிரீஸில் இருந்தபோது நானும், சூர்ய குமாரும் இலக்கை எட்டிவிடலாம் என்பது போல் தோன்றியது. இறுதியில் நியூசிலாந்து (கிவி) வெற்றி பெற்றது. இந்த விக்கெட்டில் 177 ரன்கள் கொடுப்பது நியாயமில்லை. பந்துவீச்சில் நாங்கள் சற்று பின் தங்கியதாகத் தோன்றியது. பந்து வீச்சில் 20-25 கூடுதல் ரன்கள் கொடுத்தோம். அதனால்தான் நாங்கள் இழக்க நேரிட்டது.

தொடர்ந்து பேசிய அவர், வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பேட்டிங் செய்தார். பேட்டிங், பவுலிங், பீல்டிங்.. என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டார். இப்படி விளையாடினால் மற்றவர்களிடம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இப்போது அணியில் பல இளைஞர்கள் உள்ளனர். இதுபோன்ற தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறுவோம். வாஷிங்டன் சுந்தரரும், அக்சர் படேலும் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்களோ அதே போல தொடர்ந்து செயல்பட்டால் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். 3 டி20 தொடரின் ஒரு பகுதியாக, இரண்டாவது போட்டி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.