
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது..
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்று 152 ரன்கள் தேவை என இருந்தது. 2வது இன்னிங்சில் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. அதன்பின் களமிறங்கிய இந்தியா 3வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தனர்.தொடர்ந்து வந்த ரஜத் படிதார் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து சுப்மன் கில் மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிய நிலையில், பின் 39வது ஓவரின் முதல் பந்தில் சோயப் பஷீர் ஜடேஜாவை 4 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து அடுத்த பந்தில் சர்பராஸ் கானை டக் அவுட் ஆக்கினார். இந்திய அணி 120 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது. அதன்பின் துருவ் ஜூரல் மற்றும் கில் கைகோர்த்து பொறுப்பாக ஆடி வெற்றியை நெருங்கினார்கள். சோயப் பஷீர் வீடிய 60வது ஓவரில் கில் அடுத்தடுத்து 2 சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஜூரல் (39 ரன்கள்) – கில் (52 ரன்கள்) சேர்ந்து அவுட் ஆகாமல் அணியை வெற்றிபெற வைத்தனர். இந்திய அணி 192 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
4வது டெஸ்ட் போட்டி எப்படி இருந்தது?
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 353 ரன்களில் முடிந்தது. இதில் ஜோ ரூட் அபார சதம் (122 ரன்கள்) அடித்தார். மேலும் ராபின்சன் 58 ரன்களும், பென் போக்ஸ் 47 ரன்களும், சாக் கிராலி 42 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (73 ரன்கள் ), துருவ் ஜூரல் (90 ரன்கள்) சுப்மன் கில் 38 ரன்களும் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸ் 145 ரன்களில் முடிவடைந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாக் கிராலி 60 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஆர். அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது.
India successfully chasing 150+ target in Tests in the last 10 years:
– Gabba, 2021.
– Ranchi, 2024.Shubman Gill played a vital role in both the innings with a wicketkeeper scoring 90+ in the match and finishing it. 🇮🇳 pic.twitter.com/IfDVsawvNf
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 26, 2024